திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, பத்திரப்பதிவுத் துறைக்கு கட்டப்பட்ட கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மாடியில் தற்காலிக அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தென்காசி ரயில் நகரில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்திலும் தற்காலிக அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் அமைக்க 9 இடங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஆயிரப்பேரி அருகே உள்ள அரசு வித்துப் பண்ணைக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. கட்டிடம் கட்ட ரூ.119 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது.
கைவிடப்பட்ட ஆயிரப்பேரி
ஆயிரப்பேரி அருகே ஆட்சியர் அலுவலகம் அமைக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போக்குவரத்து வசதி இல்லை என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு எளிதாக வந்து செல்ல இயலாது என்றும், தேர்வு செய்யப்பட்ட இடம் சதுப்பு நிலம் என்பதால் கட்டிடம் கட்ட உகந்ததல்ல என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதில், ஆயிரப்பேரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டும் எண்ணம் இல்லை என்றும், வேறு இடங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அறிவிப்பு
இதையடுத்து, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்ட 9 இடங்களையும் மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்படி, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு, ஆட்சியர் அலுவலம் கட்டப்படும் என்று கூறப்பட்டது.இந்நிலையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சுமார் 11 ஏக்கர் இடம் ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த தகவலை மறுக்கவில்லை. ஆனால் இந்த தகவல் உண்மை என்றும் கூறவில்லை. ஆட்சியர் அலுவலக இடம் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என்றும், அதன் பின்னர் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுவார் என்றும் கூறுகின்றனர்.
சாத்தியமற்றது எனக் கருத்து
இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எளிதில் வந்து செல்ல ஏற்ற இடமாக இருந்தாலும், வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்றும், அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்து, வேறொரு இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.மேலும், இந்த இடத்தில் 11 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஒரே இடத்தில் அமைப்பது சாத்தியமாகாது என்றும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago