முசிறியில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு மேலும் 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் முசிறி கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி மனைவி ஜெயலட்சுமி(57). இவரது சகோதரர் ஈரோட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(45), கோவையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வத்தின் மருமகன் சரவணக்குமார்(31), இவரது மனைவி துர்கா (25), மற்றொரு உறவினர் கரூரைச் சேர்ந்த ரகுராமனின் குழந்தைகள் ரத்தீஷ்(12), மிதுன்(8) உள்ளிட்ட 9 பேர் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் முசிறி பரிசல்துறை காவிரிப் படித்துறைக்கு குளிப்பதற்காக நேற்று சென்றனர். அப்போது, சரவணக்குமாரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாரா தவிதமாக ரத்தீஷ், மிதுன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதை மணலில் சிக்கி உயிரிழந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 2 குழந்தைகளையும் தேடியபோது, அடையாளம் தெரியாத 12 வயதுடைய சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

விசாரணையில் அவர், முசிறி கருமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் மகன் பார்த்திபன்(12) என்பதும், நியாயவிலைக் கடைக்கு செல்வ தாகக் கூறிவிட்டு நேற்று காலை ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கியதும் தெரியவந்தது. முசிறி போலீஸார், 2 உடல் களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்தீஷ், மிதுன் ஆகியோரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், போலீஸார், உள்ளூர் இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்