நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க ‘சாம்பல் நீர்’ மேலாண்மை மிகவும் அவசியம் தென்காசி பயிற்சி முகாமில் விளக்கம்

By செய்திப்பிரிவு

தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் சாம்பல் நீர் (சமையலறை, குளியலறை கழிவுநீர்) மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆட்சியர் சமீரன் தலைமை வகித்து பேசும்போது, “சாம்பல் நீரை சுத்திகரிப்பு செய்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கலாம். நமது வருங்கால சந்ததியினருக்கு நோயில்லாத வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கலாம். மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நீரின் அவசியத்தை கருத்தில்கொண்டு, சாம்பல் நீர் மேலாண்மையை திறம்படச் செய்து, தென்காசி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்” என்றார்.

உறிஞ்சுகுழிகள்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் பேசும்போது, “உறிஞ்சுகுழிகள் அமைப்பதன் மூலம் சாம்பல் நீர் ஆங்காங்கே தேங்காமல் தடுக்கலாம். வீட்டில் இடம் இருந்தால் தனிநபர் உறிஞ்சுகுழியினை தரமான முறையில் அமைத்து, அதனுள் மழைநீரையும் சேகரிக்கலாம். அவ்வாறு அமைக்கும்போது சாம்பல் நீரின் உப்புத் தன்மை குறைக்கப்படுகிறது. இடவசதி இல்லாத வீடுகளுக்கு சமுதாய உறிஞ்சுகுழிகள் அமைத்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் வெளிவரும் பொதுக் கழிவுநீர் சரியான வாறுகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே சாலையின் நடுவே தேங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் ஆங்காங்கே திரவக் கழிவு மேலாண்மை உறிஞ்சுக் குழி மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்