திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.70 அடி உயர்ந்துள்ளது.
இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,120 கனஅடி தண்ணீர் வந்ததால், நேற்று காலையில் நீர்மட்டம் 9.70 அடி உயர்ந்து, 111.20 அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 812 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 100 அடியாக இருந்த நிலையில், நேற்று 18.50 அடி உயர்ந்து 118.50 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 82.80 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 3.30 அடி உயர்ந்து 86.10 அடியாக காணப்பட்டது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2,900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 25 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 12.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.02 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது.
மழையளவு விவரம்
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 138, சேர்வலாறு- 74, மணிமுத்தாறு- 63.4, நம்பியாறு- 27, கொடுமுடியாறு- 15, அம்பாசமுத்திரம்- 29, சேரன்மகாதேவி- 12.60, ராதாபுரம்- 32.20, நாங்குநேரி- 40, களக்காடு- 54.6, மூலைக்கரைப்பட்டி- 40, பாளையங்கோட்டை- 75, திருநெல்வேலி- 60. மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழையளவு:
அம்பாசமுத்திரம்- 12.40, சேரன்மகாதேவி- 15, மணிமுத்தாறு- 22.60, நாங்குநேரி- 18, பாளையங்கோட்டை- 7, பாபநாசம்- 21, ராதாபுரம்- 4, திருநெல்வேலி- 9.
கடைகள் சரிந்தன
திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக கடைகள் தொடர் மழையால் சரிந்து விழுந்தன. கடைகளில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை வியாபாரிகள் அகற்றினர். இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் அழுகிய காய்கறிகள், பழங்கள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடும் உருவாகியிருக்கிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 55 மி.மீ. மழை பதிவானது. சங்கரன்கோவிலில் 53 மி.மீ., சிவகிரியில் 51 மி.மீ., அடவிநயினார் அணையில் 48 மி.மீ., தென்காசியில் 44 மி.மீ., ராமநதி அணையில் 40 மி.மீ., ஆய்க்குடியில் 29 மி.மீ., கடனாநதி அணையில் 26 மி.மீ., குண்டாறு அணையில் 21 மி.மீ., செங்கோட்டையில் 18 மி.மீ. மழை பதிவானது.
நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடனாநதி அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 76.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 564 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ராமநதி அணை நீர்மட்டம் மூன்றரை அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி நீர் வந்தது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கருப்பாநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 62.01 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 172 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர் வந்தது. 48 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago