தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக அதிமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி ஆகிய 4 தொகுதிகளைக் கொண்டு வடக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மாவட்ட செயலாளராக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள திருமயம் மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 தொகுதிகளைக் கொண்டு தெற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன், மாவட்ட செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக உள்ள பி.கே.வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001-2006-ல் அதிமுக ஆட்சியில் முதல் முறையாக புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், அதன்பிறகு தொகுதி மறுசீரமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2011-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2013 நவம்பர் 1-ம் தேதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரானார்.
இதையடுத்து, அடுத்த 2 தினங்களில் வந்த தீபாவளி பண்டிகையை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
அதன்பிறகு, 2016-ல் அதே தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நிகழாண்டு நவ.12-ம் தேதி வடக்கு மாவட்ட செயலாளராக அவர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த தீபாவளியையும் அவரது ஆதரவாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
மேலும், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களைக் கொண்ட மண்டல பொறுப்பாளராகவும் இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, 2013 முதல் 2016 வரை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago