சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி செ.நல்லசாமி அறிவிப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு போட்டியிட உள்ளதாக அச்சங்கச் செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 80 சதவீத வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டுதான் வாக்களிக்கின்றனர். வெற்றி பெறுபவர்களும் பணம் கொடுத்தே வெற்றி பெறுகின்றனர். இந்த இரண்டும் ஜனநாயகத்துக்கு அடிக்கும் சாவு மணியாகும்.

வெளிப்படைத்தன்மை கொண்ட அரசியல் கட்சி நாட்டில் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தொலைநோக்கு பார்வையும் அடுத்த தலைமுறையை முன்னிறுத்தி செயல்படும் கட்சிகளுமே தேவை. இவற்றையும், பிற பிரச்சினைகளையும் முன்னிறுத்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளுக்கு விதித்துள்ள தடையை தமிழக அரசு நீக்கி அறிவித்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். இக்கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE