செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து இன்று முதல் 12 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே குப்பநத்தம் அணை உள்ளது. 60 அடி உயரம்உள்ள அணையின் நீர்மட்டம், தொடர் மழையால் நேற்று காலை நிலவரப்படி 46.09 அடியாக உள்ளது. 700 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டு அணை யில், 405.30 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 38.19 கனஅடி நீர் வருகிறது. அணைப் பகுதியில் 13.60 மி.மீ., மழை பெய்துள்ளது. அணைக்கு நீர்வரத்து உள்ளதால், அணையை திறக்க வேண்டும் என கடந்த 10 நாட்களுக்கு முன்பு, செங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, இன்று (17-ம் தேதி) முதல் அணையை திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து முதல்வர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையில் இருந்து 2020-21-ம் ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்தன.
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
அவர்களது வேண்டுகோளை ஏற்று, குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்துக்காக 28 ஏரிகளுக்கு 17-ம் தேதி (இன்று) முதல் வரும் 29-ம் தேதி வரை என 12 நாட்களுக்கு 252.26 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம், செங்கம் வட்டத்தில் உள்ள 4,498.25 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெறுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago