கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் பங்கேற் பில்லாமல், சென்னிமலை, திண்டல் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் சென்னி மலை முருகன் கோயில், திண்டல் வேலாயுத சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கோயில் திருவிழாக்களை பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள் ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
கந்த சஷ்டி பெருவிழா தொடக்கத்தையடுத்து, சென்னி மலை முருகன் கோயிலில் சிறப்பு ஹோம பூஜை, மூலவர் அபிஷேகம், தீபாராதனை போன்றவை நடந்தது. இந்நிகழ்வின் போது கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கந்த சஷ்டி விரதம் மேற் கொள்ளும் பக்தர்கள் ராஜகோபுரம் அருகே காப்புக் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும், 21-ம் தேதி நடக்கும் திருக்கல்யாண உற்ஸவத்திலும், சூரசம்ஹாரத்திலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் வெளி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சன்னதிக்குள் மட்டும் விழா நடத்தப்படுகிறது. நேற்று மூலவர் வேலாயுதசுவாமி மற்றும் உற்ஸவர் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு பூஜைகள் நடந்தது.
ஈரோடு மகிமாலீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜையுடன் விழா தொடங்கியது. மூலவர் முருகன் மற்றும் உற்ஸவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, சண்முகார்ச்சனை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago