புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் பகல் நேரங்களில் கண்காணித்து, அவற்றை இரவு நேரங்களில் இருசக்கர வாகனம், கார், சுமை ஆட்டோ போன்ற வாகனங்களில் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கந்தர்வக்கோட்டை, திருமயத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த தலா 30 ஆடுகள், ஆலங்குடி அருகே அரையப்பட்டி, வெள்ளக்கொல்லையில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், அரசமலை, வையாபுரி, கங்காணிப்பட்டி போன்ற இடங்களில் பல ஆடுகள் திருடுபோயின.
இதேபோல, நேற்று அதிகாலை வடகாடு, மாங்காடு, கீழாத்தூர் போன்ற பகுதிகளில் அடுத்தடுத்து 10 ஆடுகள் திருடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், இதுதொடர்பாக புகார் மனு அளித்தாலும், காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “ஆடுகள் திருடப்பட்டதாக அதிக புகார்கள் வந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, குற்றப்பிரிவு போலீஸாருக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago