திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. தினமும் உள்திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கோயில் முன்பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 21-ம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுத்தல் வைபவமும் கோயில் உள்பகுதியில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை சாலைகுமாரசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆறுமுகர் சந்நிதி, வண்ணார்பேட்டை குட்டத் துறை சுப்பிரமணியர் கோயில், பாளையங் கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயில் சுப்பிரமணியர் சந்நிதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.
ஆய்க்குடியில் பக்தர்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி யில் உள்ள முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டில் கரோனா பரவல் காரணமாக சுவாமி வீதியுலா நடைபெறாது என்றும், கோயிலுக்குள் பக்தர்கள் பங்கேற்பின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், நேற்று காலையில் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடை பெற்றது. கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் ஆலோசனை நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். கொடியேற்றம் முடிந்த பின்னர், கோயிலுக்குள் ஏராளமானோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக் கப்படுவதுபோல், இங்கும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளிமலை முருகன், கன்னியாகுமரி முருகன் குன்றம், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில், நாகராஜா கோயில் என, அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்த ஆட்சியர் அரவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. விழாவையொட்டி நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. காலை 8.30 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக சுவாமி சுப்பிரமணியருக்கு காப்பு கட்டப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.செண்பகவல்லி அம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 8 மணி முதல் 10 மணி வரை மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. 10.30 மணிக்கு பழனியாண்டவர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.
கழுகுமலையில் ரத்து
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 5-ம் நாளில் தாரகாசூரன் சம்ஹாரம் நடைபெறும். தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இங்கு மட்டும் தான் இது நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவலை கருத்தில் கொண்டு இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago