50 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் அருகே பழங்குடியின இருளர் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே சி. மானம்பாடி கிராமத்தில் வாய்க்கால் கரை ஓரமாக குடிசைகளில் இருளர் பிரிவைச் சேர்ந்த 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஒன்றையடி பாதையில் தான் நடந்து செல்ல வேண்டும். மீன்,நண்டு, நத்தை பிடித்தல் ஆகிய தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் இப்பகுதிக்கு சென்றுள்ளார். சுமார் 50 ஆண்டுகளாக இப்பகுதியில் மின்சார வசதி இல்லை என அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் சிதம்பரம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். புதிதாக 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் குறுகிய காலத்தில் நடப்பட்டு அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை சார் ஆட்சியர் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறார்களுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினர். வீடுகளில் முதல்முறையாக மின்விளக்கு எரிவதை கண்டு மகிழ்ச்சி அடைந்த இருளர் குடியிப்புவாசிகள் சார் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். சிதம்பரம் உதவி மின்பொறியாளர் பாரி, மின்கம்பியாளர் தினேஷ், பேராசிரியர் பிரவின்குமார், சமூகஆர்வலர் பூராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago