தீபாவளிப் பண்டிகையின்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம், ஆசனூர், அந்தியூரை அடுத்த பர்கூர், கோபியை அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியையொட்டியுள்ள இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், வனவிலங்கு களை அச்சப்படுத்தும் வகையில் பட்டாசுவெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைகள் சரணாலயம்
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் 77 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு சரணாலயத்தில் சீசன் தொடங்கியுள்ளதால், பறவைகள் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சரணாலயத்தை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், புங்கம்பாடி, மீனாட்சிபுரம், செல்லப்பன்பாளையம், செம்மாண்டம்பாளையம், தச்சன்கரை வழி உள்ளிட்ட கிராம மக்கள் பறவைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியின்போது பட்டாசுகளைத் தவிர்த்து வருகின்றனர். இந்த ஆண்டும் தீபாவளியின்போது பட்டாசுகளைத் தவிர்க்கவுள்ளதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் எச்சரிக்கை
இந்நிலையில் ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப் படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago