கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை(நவ.14) தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, ஏராளமான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதையடுத்து, ரயில்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச்செல்ல வாய்ப்புள்ளது என்பதால், அதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலைய நுழைவு வாயில்களில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மாதிரி பட்டாசுகளை கையில் ஏந்தி, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் உட்பட ரயில்கள் நின்றுசெல்லும் பல்வேறு ரயில் நிலையங்களிலும், தீவிர சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருச்சியைக் கடந்து செல்லும் ரயில்களில் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாயின் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறும்போது, “உராய்வு மட்டுமின்றி வெப்பம் தாளாமல் வெடிக்கும் பட்டாசு வகைகளும் உள்ளன. எனவே, தீப்பெட்டி, கம்பி மத்தாப்பு உள்ளிட்ட எந்த வகை பட்டாசையும் ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. இதை மீறி எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago