ஐடிஐ படித்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரும் வகையில், வளாகத்தேர்வுகளை வேலைவாய்ப்புத்துறை நடத்தி வருகிறது.
ஈரோடு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் நடந்த வளாகத்தேர்வினை தொடங்கி வைத்து கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் ஆ.லதா பேசியதாவது:
ஐ.டி.ஐ.களில் இறுதி ஆண்டு படித்து வரும் 2 ஆயிரத்து 600 மாணவ-மாணவிகள் தனியார் வேலை இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென கோவை மண்டலத்தில் உள்ள 16 அரசு தொழில்பயிற்சி மையங்களில் வளாகத்தேர்வு நடந்து வருகிறது. இதன் மூலம் சிறந்த நிறுவனங்களில் உறுதியான வேலைவாய்ப்பு மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கிறது. இந்த முகாமில் கோவை மண்டலத்தில் மட்டும் டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட 160 நிறுவனத்தினர் நேரடியாக ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.
ஐ.டி.ஐ. படிப்பை பொறுத்தவரை முழுக்க முழுக்க இலவசமாக தமிழக அரசு அளித்து வரும் கல்வியாகும். ஐடிஐ மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள் ஆகியவற்றுடன் மாதம் தோறும் ரூ.750 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் அரசு ஐ.டி.ஐ.களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆண்கள் 40 வயது வரையிலும், பெண்கள் 40 வயதுக்கு மேல் இருந்தாலும் பயிற்சியில் சேரலாம். தற்போதைய சூழலில் ஐ.டி.ஐ. படித்த மாணவ-மாணவிகளுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளது, என்றார்.
நிகழ்வில், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குநர் எம்.மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி டி.ஜோதி, அரசு ஐ.டி.ஐ. பயிற்சி அதிகாரி மு.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago