கிணற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்தபோது, தந்தை கண் முன்னே மகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் கதிரேசன். கார் ஓட்டுநர். இவருக்கு அபிராம் விஷால் (16) என்ற மகனும், யோக (11) என்ற மகளும் உள்ளனர். அபிராம் விஷால் பிளஸ் 1 படித்து வந்தார்.
மொடக்குறிச்சி அருகே குளூரில் உள்ள நண்பரின் தோட்டத்து கிணற்றில் மகன் மற்றும் மகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க கதிரேசன் அழைத்துச் சென்றார். இருவரது இடுப்பிலும் பிளாஸ்டிக் கேன்களை கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். சிறிது நேரம் பயிற்சி பெற்ற நிலையில், ஓய்வு எடுப்பதற்காக கிணறு திட்டு மீது ஏறி அபிராம் விஷால் நின்றார். அப்போது இடுப்பில் கட்டி இருந்த பிளாஸ்டிக் கேன்களை கழட்டியிருந்த நிலையில், நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தார்.
தன் மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த கதிரேசன், மகனைக் காப்பாற்ற முயன்றார். அவரது முயற்சி பலனளிக்காத நிலையில், அவரது கண் முன்பே, மகன் அபிராம் விஷால் நீரில் மூழ்கினார்.
மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 70 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய விஷாலின் உடலை மீட்டனர். மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘பள்ளிகள் விடுமுறை என்பதால் நீச்சல் பயிற்சி போன்றவற்றில் குழந்தைகளை பெற்றோர் ஈடுபடுத்துகின்றனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. குறிப்பாக பவானி, காவிரி ஆறுகள், பாசன வாய்க்கால்கள், கிணறுகளில் நீச்சல் பயிற்சி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago