ரூ. 184 மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில் 7 மாதங்களுக்குப் பின்னர் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ஜேடர்பாளையம் காவிரி ஆற்றை ஒட்டி ராஜவாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்க ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது.
தற்போது பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று ராஜவாய்க்காலில் மலர் தூவி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
இதன்மூலம் 16 ஆயிரத்து 149 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர, 7 மாதங்களுக்கு பின்னர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பாசன விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பொதுபணித் துறை நீர்வள ஆதாரத்துறை செயற் பொறியாளர் கவுதமன், ஆவின் தலைவர் ஆர்.ஆர். ராஜேந்திரன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago