அன்றைய மிட்டாய் கடையாக ஆரம்பித்து, இன்றைக்கு மிரள வைக்கும் இனிப்பு வகைகளின் கடலாக விளக்கும் தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பி.ஜி.சுப்பிரமணியசர்மா, தன்னுடைய வியாபாரத்தின் முகவரி குறித்து கூறியதாவது:
“நான் ப்ளஸ் 1 வகுப்பு படித்துக்கொண்டிந்தபோது என் தந்தை குருதயாள்சர்மாவுக்கு உதவி செய்யக் கடைக்குள் நுழைந்தேன். இனிப்புகளுக்குத் தேவையான பொருட்களை அளந்து கொடுப்பது, சமோசாவுக்கு மாவு பிசைவது போன்றவைதான் எனது அரிச்சுவடி. சமையலறையில் மாவு பிசைந்துவிட்டு கைகளில் ஒட்டியிருக்கும் மாவுடன் பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடுவேன். இதனால் எனது சக மாணவர்கள் என்னை மைதா மாவு என்றே கூப்பிடுவார்கள்.
“பாரம்பரிய இனிப்புவகைகளை மிகவும் ருசியுடன் செய்துவந்த என் தந்தையார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்து 1940 வாக்கிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து சென்னையில் சில காலம் இருந்துவிட்டு. பின்பு தஞ்சாவூரில் குடியேறினார். சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மட்டுமே இனிப்பு வகைகளத் தயார் செய்யவேண்டும் என்பதில் மிகச் சிறந்த ஸ்வீட் மாஸ்டரான என் தந்தை ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
தஞ்சை புகைவண்டி நிலையத்துக்கு எதிரே 1949 -ம் ஆண்டில் சிறிய கடையாகத்தொடங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸ் இன்று இ-வணிகம் வரை வளர்ந்துவிட்டது.
தான் ஒருபோதும் பம்பாய் நகரத்தில் இருந்ததில்லை என்றாலும் அதன் நாகரீகமும், புதுமையும் தந்தையை கவர்ந்ததால், பாம்பே ஸ்வீட்ஸ் என்ற பெயருடன் 1949 -ல் தனது இனிப்புக்கடையை அவர் தொடங்கினார்.
உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நகரத்தின் நல்லதொரு சிற்றுண்டிக் கடையாக இதனைக் கண்டனர்- உண்டு களித்தனர். முதலில் வட இந்திய உணவு வகைகளுடன் தொடங்கப்பட்டாலும், பின் தென்னிந்திய சிற்றுண்டிகளும் துரித உணவு வகைகளும் விற்கப்பட்டன.
வட இந்திய மற்றும் தென்னிந்திய சமையற்கலையை இணைத்து குருதயாள் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சந்திரகலா மற்றும் சூர்யகலா ஆகிய இனிப்பு வகைகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. இவை, பால் பவுடர் அல்லது கோவா முந்திரி போன்ற பருப்பு வகைகளையும் சேர்த்துப் பிசைந்து குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றுடன் சேர்த்துப் பதப்படுத்திய பின், ஜீராவில் தோய்த்தெடுத்து தயாரிக்கப்படும் மாவுப் பண்டங்கள் ஆகும்.
“வட இந்தியாவில் ஹோலி போன்ற பண்டிகைகளின்போது குஜியா என்று ஒரு இனிப்பு வகை (சுடப்பட்ட மாவுப் பண்டம்) தயார் செய்வார்கள். சந்திரகலா கண்டுபிடிப்பதற்கு என் தந்தைக்கு விதையாக இருந்தது இதுதான். சூர்யகலா மற்றும் சந்திரகலா இரண்டிலுமே உள்ளிருக்கும் மாவுப்பொருள் ஒன்றுதான். தயாரிப்பின் கடைசிப் பணியாக அவற்றை சூடான சர்க்கரைப்பாகில் தோய்த்து எடுப்பதால் அவை தென்னிந்திய இனிப்பு வகைபோல சுவை பெறுகின்றன.
பிறை சந்திரன் போல் தோன்றும் இனிப்பு சந்திரகலா என்றும் சூரியன்போல வட்டமாகக் காட்சியளிக்கும் இனிப்பு சூரியகலா என்றும் அழைக்கப்படுகின்றன. பரிசு அளிப்பதற்கு ஏற்றவையாக இருப்பதால் மினி சூரியகலா மற்றும் மினி சந்திரகலா ஆகியவை தற்பொழுது வாடிக்கையாளர்கள் இடையே பிரபலமாகி வருகின்றன.
தஞ்சாவூரில் இருக்கும் எங்களது உற்பத்திக்கூடம் சுமார் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் எப்பொழுது பார்த்தாலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கரோனா ஊரடங்கால் ஊழியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டாலும், ஆண்களும், பெண்களும் தனித்தனி குழுக்களாக இயங்கி இனிப்புகளையும் கார வகைகளையும் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவை உடனுக்குடன் தஞ்சையிலும், பட்டுக்கோட்டையிலும் இருக்கும் பதினான்கு கிளைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் கூட ஒரு நாளைக்கு 250 கிலோ சந்திரகலா தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது.
ஊரடங்கின் காரணமாக உணவகங்களுக்கு நேரில் வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் வருவோருக்கு வித விதமான பலகாரங்களைக் கொண்ட பேக்கிங் வழங்கப்படுகின்றன.
பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. விநியோக முறைகளும் மேம்படத் தொடங்கிவிட்டன. நாங்களும் எங்கள் இணைய தளம் மூலம் அனைத்திந்திய அளவில் வாடிக்கையாளர் சேவையைத் தொடங்கிவிட்டோம். வெளி நாடுவாழ் தஞ்சை மக்களிடம் இருந்தும் ஆடர்களைப் பெற்று வருகிறோம்.
பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளின் தயாரிப்பு முறைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம். இந்த நிறுவனத்தின் சிற்பி என நாங்கள் கருதும் என் தந்தை குருதயாள் சர்மாவின் கனவுகளை மேலும், தொடர வருங்கால சந்ததியினருக்கு இவை உதவியாக இருக்கும்.
1991 -ம் ஆண்டில் மறைந்துவிட்ட என் தந்தையை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். ஐம்பது ஆண்டு காலம் அவர் தஞ்சையில் இந்தத் தொழிலில் இருந்தார். அவருடைய மறைவுக்குப் பின், அவர் நட்ட இந்த மரம் பல கிளைகளைவிட்டு வளர்ந்து இருக்கிறது. சந்திரகலாவும் சூர்யகலாவும் அவருடைய புத்தாக்கத் திறனுக்கு சிறந்த உதாரணங்களாகத் திகழும் என்றார் சுப்பிரமணிய சர்மா.
=
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago