திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் 2021 ஏப்ரலில் நிறைவடையும் ஆய்வுக்குப் பின் ஆட்சியர் சு.சிவராசு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரலில் நிறைவடையும் என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பஞ்சப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில், 2.4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், 13.75 ஏக்கரில் ரூ.13.50 கோடியில் சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் நிலையம் (தரைநிலை) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், உய்யக்கொண்டான் கால்வாய் கரையோரம் ரூ.17.56 கோடியில் புலி, மயில், தாமரை ஆகியவற்றின் பெயர்களில் 3 பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, ரூ.17.34 கோடியில் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி, அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் தேக்கமடைந்துள்ள திடக்கழிவு களை ரூ.50 கோடி மதிப்பில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகரில் 15 வார்டுகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.312.14 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று செய்தியா ளர் சுற்றுப் பயணத்தின்போது, இந்தப் பணிகளை ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஒப்பந்ததாரர்களையும், மாநக ராட்சி அலுவலர்களையும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியதாவது:

பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில், ஓராண்டுக்கு 3,994.56 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனால், மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.2.23 கோடி சேமிக்கப்படும். இந்தப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும். உய்யக்கொண்டான் கால்வாய் கரைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, ஜனவரியில் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப் படும்.

அதேபோல, சத்திரம் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது 67 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தரைத் தளம் உட்பட 3 தளங்களாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய வளாகத்தில், ஒரே நேரத்தில் 30 பேருந்துகளை நிறுத்த முடியும். இந்தப் பேருந்து நிலையம் கழிப்பிடங்கள், கடைகள், காத்திருப்போர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு வழங்கும் அறை, உணவகம், குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா அறை, போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை, தீ பாதுகாப்பு அறை, நேரம் காப்பாளர் அறை என பல்வேறு வசதிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரலில் நிறைவடையும் என்றார்.

செய்தியாளர் சுற்றுப்பயணத் தின்போது, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் குமரேசன் (மேற்கு), சிவபாதம்(கிழக்கு), மாநகராட்சி உதவி ஆணையர்கள் எம்.தயாநிதி, ஆர்.வினோத், திருஞானம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்