தனியார் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது, என நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணையம் மூலம் கடந்த அக்., 12-ம் தேதி முதல் இம்மாதம் 7-ம் தேதி வரை 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் நுழைவுநிலை வகுப்பில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 1,419 காலியிடங்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் எண்ணிக்கையைவிட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் பள்ளியில் சேர்க்கை வழங்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டினைவிட அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு நாளை (12-ம் தேதி) அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படும்.
மேலும் தகுதியுள்ள, தகுதியற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த பள்ளி தகவல் பலகையில் இன்று (11-ம் தேதி) ஒட்டப்படும். மேலும், விடுபட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் குலுக்கல் நடைபெறுவதற்கு முன்னதாக குறிப்பிட்ட பள்ளியில் ஒப்படைத்து குலுக்கலில் கலந்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago