திருப்பத்தூரில் தடையை மீறி பொதுக்கூட்டம் பாஜக நிர்வாகிகள் உட்பட 326 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்திய பாஜக முக்கிய நிர்வாகிகளை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

தமிழகத்தில் பாஜக சார்பில் ‘வேல் யாத்திரை’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையை தொடங்கியுள் ளார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வேல் யாத்திரையை அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று மேற்கொண்டார். அவரை, வரவேற்க திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் பாஜகவினர் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து, வேல் யாத்திரையுடன் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எல்.முருகன் நேற்று காலை வந்தார். திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பாஜக வேல் யாத்திரையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாதனூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட எல்லை வரை பாஜகவினர் வழிநெடுகிலும் திரளாக திரண்டு வேல் யாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, வேல் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பாஜக முக்கிய நிர்வாகிகள் லாரியில் நின்றபடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு, மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராகவன், மாநில செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் வாசுதேவன் வரவேற்றார்.

பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையை வரவேற்கும் விதமாக வெற்றிவேல், வீரவேல் என பாஜகவினர் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், நகரத் தலைவர் அருள்மொழி, எஸ்டி மாநில துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் அன்பழகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஈஸ் வரன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், ராகவன், கார்த்தியாயினி உட்பட 326 பேரை திருப்பத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்