தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிறு விடுமுறை நாளான நேற்று பண்டிகை கொண்டாட்டத்துக்கு தேவையான புத்தாடைகள், சலுகை விலை பொருட்களை வாங்க சேலம் மாவட்டத்தின் அனைத்து ஊர்களில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக மக்கள் பண்டிகை, திருவிழா என எந்தவித கொண்டாட்டங்களிலும் ஈடுபட முடியாத நிலையில் இருந்தனர். தற்போது, ஊரடங்கில் தளர்வு மற்றும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, மக்கள் கரோனா துன்பத்தை மறந்து, தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு தயாராகிவிட்டனர். பண்டிகைக்குத் தேவையான புத்தாடைகள், பண்டிகை கால தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், செல்போன்கள் வாங்கும் ஆர்வத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, புத்தாடைகளை வாங்க தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, சேலம் மாவட்டத்தில் சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடை வீதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருந்தனர்.
சேலத்தில் முதல் அக்ரஹாரம், சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி, 2-வது அக்ரஹாரம், பர்கூர் ஜவுளி கடை வீதி, ஓமலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஜவுளிக் கடைகள், சாலையோரக் கடைகள் என அனைத்திலும் மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கினர்.
ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட நகரங்களிலும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாநகர போலீஸார் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலைகளில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க, கூடுதல் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தாடைகள் வாங்க வந்தவர்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகக் கவசம் அணியாமல் வந்திருந்தனர். மேலும், கடை வீதிகளில் நெரிசல் அதிகமாக இருந்ததால், மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago