திருச்சி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்களை தடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு நடத்தினார்.

கூட்டத்தில் ஆட்சியர் சிவராசு பேசியது:

திருச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 10 மகப் பேறு மரணங்கள் நேரிட்டன. ஆனால், நிகழ் நிதியாண்டில் அதே காலகட்டமான ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 18 ஆக உயர்ந்துள்ளது. எனவே, இதைத் தடுக்கும் வகையில் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி களை முறையாக பதிவு செய்து, விரிவான அவசர மகப்பேறியல் மற்றும் சிசு பராமரிப்பு (சீமாங்) நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்க வேண்டும்.

செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் குழந்தையின் மைக்கு சிகிச்சை அளிக்கும்போது பெண்களின் வயது மற்றும் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மிகவும் சிக்கல் இருப்பின், குழந்தைத் தத்தெடுப்பு பற்றிய ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும்.

இனி மகப்பேறு மரணங்கள் நேரிடாத வகையில் அனைத்து மருத்துவமனைகளும் கவ னத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவம்- ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி, அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் உமா மோகன்ராஜ், குடும்ப நலன் துணை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா கூறும்போது, “2 குழந்தைகள் உள்ள தாய்மார்கள் மீண்டும் கர்ப்பம் தரிக்கும்போது, மருத்துவமனைக்குச் சென்றால் கண்டிப்பார்களோ என்ற அச்சத்தில் முறையான சிகிச்சை எடுக்காமல், கடைசி நேரத்தில் குறிப்பாக பிரசவம் சிக்கலான பிறகு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மேலும், ஏற்கெனவே கருக்கலைப்பு செய்திருந்தால் அந்த விவரம் உட்பட பல்வேறு விவரங்களை மறைக்கின்றனர். எனவே, மருத்துவரிடம் எதையும் மறைக்காமல் தங்கள் உடல்நிலை குறித்து கூறுவதுடன், மருத்துவர் கூறுவதை முறையாக பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்