காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் திருச்சி, தஞ்சாவூரில் 306 மனுக்களுக்கு தீர்வு

By செய்திப்பிரிவு

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவல் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 306 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் உட்கோட்டங்கள் வாரியாக நேற்று நடத்தப்பட்டது. இதன்படி, ஜீயபுரம் உட்கோட்டத்தில் ஜீயபுரம் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம், திருவெறும்பூர் உட்கோட்டத்தில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், லால்குடி உட்கோட்டத்தில் சமயபுரம் ஜெயந்தி மகால், முசிறி உட்கோட்டத்தில் முசிறி விஐபி மகால், மணப்பாறை உட்கோட்டத்தில் மணப்பாறை காவல் நிலையம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 193 மனுக்கள் வரப்பெற்றன. மனுதாரர்கள் மற்றும் எதிர் தரப்பினரிடம் போலீஸார் அந்த இடத்திலேயே விசாரணை நடத்தினர். இதில் ஜீயபுரம் உட்கோட்டத்தில் 36, திருவெறும்பூர் உட்கோட்டத்தில் 37, லால்குடி உட்கோட்டத்தில் 41, முசிறி உட்கோட்டத்தில் 21, மணப்பாறை உட்கோட்டத்தில் 21 என மொத்தம் 156 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

திருவெறும்பூரில் நடைபெற்ற முகாமை மத்திய மண்டல ஐ.ஜி எச்.ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா, திருச்சி மாவட்ட எஸ்.பி த.செந்தில்குமார்(பொ) ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூரில் காவல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்ற மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யது:

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக மக்கள் குறைதீர் முகாம் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நடைபெற்றது. இதில், 8 உட்கோட்டங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் மட்டும் 150 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல, அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை எஸ்.பி ஆர்.னிவாசன் தொடங்கி வைத்தார். முகாமில் அரியலூர் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் நிலம், பாதை, குடும்ப பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக 50 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தொடர்ந்து, இருதரப் பினரையும் அழைத்து தீர்வுக்காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்