தம்மம்பட்டி சார் பதிவாளர் காரில் ரூ.51 ஆயிரம் பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

தம்மம்பட்டி சார் பதிவாளரின் காரில் இருந்து ரூ.51 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் லஞ்ச புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அங்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்றனர். போலீஸார் வருவதை முன் கூட்டிய அறிந்து கொண்ட சார் பதிவாளர் துறை அலுவலர்கள் அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டி இருந்தனர்.

இதனால், சந்தேகம் அடைந்த சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தங்கமணி, சிவக்குமார், நரேந்திரன் மற்றும் போலீஸார் சார்பதிவாளர் அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த ஆத்தூர், நவாக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த சார் பதிவாளர் செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் ரூ.51 ஆயிரம் பணம் இருந்தது,

மேலும், குழந்தைக்கான சிறிய சைக்கிள் ஒன்றும் இருந்தது அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு நேற்று காலை வரை விடிய விடிய சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையின்போது, தம்மம்பட்டி துணை வட்டாட்சியர் காத்தமுத்து, வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்