வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் வரும் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருத்தப்பணிகளின் போது வரும் 21, 22 மற்றும் டிச., 12, 13 ஆகிய நான்கு நாட்கள் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி மைய அலுவலர் கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் உரிய சேர்த்தல், நீக்கம், திருத்தம் படிவங்களுடன் இருப்பர். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள “www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,621 வாக்குச் சாவடிகளுக்கும், அனைத்து அரசியல் கட்சியினரும், வாக்குச் சாவடி முகவர்களை நியமனம் செய்து வாக்குச்சாவடி முகவர்களின் விவரங்களை சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி வாரியாக அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைகுமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ர.பாத்திமா மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்