வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக-வினரை போலீஸார் கைது செய்தனர்.
கரோனா தொற்று அபாயம் இருப்பதால், பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பாஜக -வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக-வினர் நேற்று காலை முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகம் முன்பு வந்தனர். அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.
பின்னர், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோட்டப் பொறுப்பாளர் கோபிநாத் தலைமையில் கோஷம் எழுப்பி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகே தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும், சாலைமறியலில் ஈடுபடவும் முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரைக் கைது செய்தனர்.ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் கோபியில் மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் மறியல்
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் பின்னர், பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 15 பெண்கள் உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் ஓசூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் நாகராஜ், வேப்பனப்பள்ளி தொகுதி பொறுப்பாளர் அன்பரசன் உட்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரியில் நான்கு ரோடு பகுதியில் பாஜக-வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 100 நபர்களை தருமபுரி நகரக் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago