ஆத்தூர் அருகே எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு இரண்டையும் இணைத்து புதிய ஏரி அமைப்பது குறித்து ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவாச்சூர் பகுதியில் உள்ள எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு இரண்டையும் இணைத்து புதிய ஏரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆட்சியர் ராமன் தலைமையில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கெங்கவல்லி எம்எல்ஏ மருதமுத்து ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு இரண்டும் சடைய கவுண்டன் மலை வனப்பகுதி அடிவாரத்தில் மலைகளில் இருந்து வரக்கூடிய நீர் ஒன்று சேர்ந்து சிறுவாச்சூர் அருகே தேம்படி ஆறு என்ற ஓடையின் வழியாக திருமணிமுக்தா நதியில் கலக்கின்றது. அவ்வாறு நதியில் கலந்து மழைநீர் வீணாவதை தடுத்து எலந்தவாரி ஓடை மற்றும் சம்படி ஆறு ஆகிய இரண்டு ஓடைகளை இணைத்து புதிதாக ஏரி அமைக்கப்படும்பொழுது அருகாமையில் உள்ள சிறுவாச்சூர், வரகூர், நாவக்குறிச்சி மற்றும் புத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைப்பதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்கும் நீர் தடையின்றி கிடைக்கும்.
இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஏரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய ஏரி அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையினை தயாரித்து 15 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தினை விரைந்து மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் முருகன், கூடுதல் இயக்குநர் (திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago