டாஸ்மாக் பணியாளர்கள் போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு, கோஷம் எழுப்பினர்.

கடந்த 17 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் டாஸ்மாக் நிறுவன தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிடவும், எட்டு மணி நேர பணி நேரத்தை அமல்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக 30 சதவீதம் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டியு டாஸ்மாக் தொழிற் சங்க செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். சிஐடியு பாரதி, பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் சங்க செயலாளர் பொ.வை.ஆறுமுகம், சின்னசாமி, கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பையனப்பள்ளி டாஸ்மாக் குடோன் எதிரே டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்பிஎப் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், பாட்டாளி தொழிற்சங்க அமைப்பு செயலாளர் விநாயகம், சிஐடியு மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்பிஎப் மாநில துணை செயலாளர் சஞ்சீவன் நன்றி கூறினார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி மேலாளர் மாதேசிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்