பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசைக் கண்டித்து திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட அக்கட்சியைச் சேர்ந்த 1,274 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக சார்பில் திருத்தணியில் நவ.6-ல்(நேற்று) தொடங்கி, திருச்செந்தூரில் டிச.6-ல் நிறைவு செய்யும் வகையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிர மணியன், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உட்பட 225 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் சந்திரசேகர், திருச்சி கோட்ட பொருளாளர் இல.கண்ணன் உட்பட 96 பேர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்டச் செயலாளர் கோகுல்பாபு உட்பட 31 பேர், ஜெயங்கொண்டத்தில் 25 பேர், திருமானூரில் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முன்பிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையில் சென்ற பாஜகவினரை போலீஸார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூரில் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, பொதுச் செயலாளர்கள் மோகன், நகுலன் உட்பட 132 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் ரயிலடி முன் பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 152 பேரும், கும்பகோணம் பக்தபுரி ரவுண்டானாவில் வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரும், திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் சி.எஸ்.கண்ணன் உட்பட 200 பேரும், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் நேதாஜி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 பேரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago