திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 73.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 20, சேர்வலாறு- 12, மணிமுத்தாறு- 12.8, நம்பியாறு- 25, கொடுமுடியாறு- 60, அம்பாசமுத்திரம்- 22, சேரன்மகாதேவி- 9, நாங்குநேரி- 35, பாளையங்கோட்டை- 14.60, ராதாபுரம்- 7, திருநெல்வேலி- 5, மூலக்கரைப்பட்டி- 13.
மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 306 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,406 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.67 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
சேர்வலாறு நீர்மட்டம் 99.88 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 30.50 அடியாகவும் இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 61 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
திருநெல்வேலி, பாளையங் கோட்டையில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி டவுன் குற்றாலம் சாலை போக்கு வரத்துக்கு தகுதியற்றதாக சேறும் சகதியுமாக மாறியிருந்தது. குடிநீர் குழாய்களை பதிக்க தோண்டபட்ட குழிகளால் இச் சாலை சேதமடைந்ததாக தெரிகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 52.40 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:ஆய்க்குடி-51, செங்கோட்டை- 43, கருப்பாநதி அணை-38, குண்டாறு அணை-31, அடவிநயினார் அணை-20, சங்கரன்கோவில்-18, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 10, சிவகிரி-8.
குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் (36.10 அடி) உள்ளது. மற்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 68.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 58.25 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 101 அடியாகவும் இருந்தது.
மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இருப்பினும் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவியில் குளித்துவிட்டுச் செல்வது வழக்கம். சாரல் காலம் முடிந்துவிட்டதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago