வீடுகளில் நகை திருடிய போலீஸ் ஏட்டு கைது

By செய்திப்பிரிவு

கற்குவேல்திருநெல்வேலியில் வீடுகளில் நகை திருடியது தொடர்பாக தூத்துக்குடி போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி பகுதிகளில் வீடுகளில் நடந்த நகை திருட்டு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய, காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருடப்பட்டன. அந்த வீட்டில் 5 பேரின் கை ரேகைகள் பதிவாகியிருந்தன. அந்த ரேகைகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு கற்குவேல் என்பவரின் ரேகையுடன் ஒத்துப்போனதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த கற்குவேல், தூத்துக்குடி ஆயுதப்படைக்கு கடந்த 2 வாரத்துக்கு முன் மாற்றப்பட்டார். கற்குவேலின் நடவடிக்கைகளை கண்காணித்து, திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீஸார் கண்டறிந்தனர்.

இதனால் தென்காசி மாவட்டத்துக்கு கற்குவேல் பணியிடமாற்றம் செய்யப் பட்டார். ஆனால் அவர் பணியில் சேரவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பில் இருந்த ஏட்டு கற்குவேலை திருநெல்வேலி மாநகர போலீஸார் பிடித்து பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் பெருமாள்புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். கற்குவேலிடமிருந்து 3 செல்போன்கள், 15 பவுன் நகைகள், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கூட்டாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்