பிரிண்டிங் நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு அபாயம் காங்கேயம்பாளையம் கிராம விவசாயிகள் குற்றச்சாட்டு

காங்கேயம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பிரிண்டிங் நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கே.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது:

காங்கேயம்பாளையம் கிராமம் துண்டுக்காடு தோட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் பிரிண்டிங் நிறுவன ஆலையில் இருந்து அதிக அளவில் சாயக் கழிவுகள் வெளியேறுவதால், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொழுவு, காங்கேயம்பாளையம், சாணார்பாளையம், மணியம்பாளையம், குப்பாண்டாம்பாளையம், காளிபாளையம் கிராமங்கள் பி.ஏ.பி. வாய்க்கால் பாசனப் பகுதியாக உள்ளதால், ஊரின் அனைத்துப்பகுதிகளிலும் சாயக் கழிவுநீர் கலக்கிறது. இதனால், கிணறு மற்றும்ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மாசடைந்து, எந்தவித விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியின் பிரதான விவசாயமான தென்னைசாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல தக்காளி, சோளம், நிலக்கடலை, வெங்காய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் பாதிக்கப் பட்டுள்ளனர். பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாவதுடன், விளை நிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிலத்தடி நீர் கெடுவதால் குடிநீரும் பாதிக்கப் படுகிறது. இதுதொடர்பாக பிரிண்டிங்நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நிறுவனத்தை நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு விவசாயி வேலுச்சாமி கூறும்போது, "வருவாய்த் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் புகார் தெரிவித்துள்ளோம்.

ஏற்கெனவே, திருப்பூர் பகுதிகளில் இயங்கும் சாய மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் அத்துமீறி நடந்து வருவதை கண்டித்து, சென்னைஉயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடு உத்தரவுகளை வழங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட தனியார் பிரிண்டிங்நிறுவனத்தின் சட்ட விரோத செயல்களுக்கு தக்க நடவடிக்கை எடுப்பதுடன், பிரிண்டிங் பட்டறையை மூட வேண்டும். எங்கள் பகுதி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

திருப்பூர் தெற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சுவாமிநாதன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "இதுதொடர்பாக உடனடியாக விசாரிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்