ஈரோடு மாவட்டத்தில் பயிர் மகசூலை அதிகரிக்கும் வகையில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் 15 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் செம்பாம் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைப்பண்ணையினை ஆய்வு செய்த வேளாண் இணை இயக்கு நர் சி.சின்னசாமி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறை மூலம், நெற்பயிரில் 4 ரகங்களும், நிலக்கடலைப் பயிரில் 7 ரகங்களும், பயறு வகைகளில் 4 ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் என்.எல்.ஆர் 34449 (நெல்லூர்) மற்றும் ‘சம்பா சப் 1’ ஆகிய நெல் ரகங்கள் அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் பி.பி.டி 5204 - ரகத்திற்கு மாற்றாகவும், டிபிஎஸ் 5 ரகமானது ஏஎஸ்டி 16 நெல் ரகத்திற்கு (இட்லி குண்டு) மாற்றாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக மகசூல் தரும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ள டி.கே.எம்.-13 (திருவூர்க்குப்பம்), திருச்சி -3 போன்ற ரகங்களும் நடப்பு பருவத்தில் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, நிலக்கடலைப்பயிரில் பிஎஸ்ஆர் 2, ஜிஜேஜி 31, ஜிஜேஜி 32, டிஎம்வி 14, ஐசிஜிவி 350, கோ 7 மற்றும் விஆர்ஐ 8 ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி அதிக மகசூல் தரும் ரகங்கள் ஆகும். அதேபோல் உளுந்து பயிரில் வம்பன் 8, வம்பன் 9 மற்றும் வம்பன் 10 ஆகிய ரகங்களும், பாசிப்பயறில் கோ 8 ரகமும் குறைவான வயது, பூச்சி, நோய்த்தாக்குதல் தாங்கும் தன்மை மற்றும் அதிக மகசூல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரகங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படும் ரகங்கள் அடுத்த பருவத்தில் மேலும் அதிகமாக விதை உற்பத்தி செய்யப்பட்டு கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்யத் திட்டமிட்டப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago