கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமானது.
ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால், அயலூர், செம்மாண்டம்பாளையம், நாகர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் கீரிப்பள்ளம் ஓடையில் கலந்தது. கோபி நகரின் மையப்பகுதியில் ஓடும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வண்டிப்பேட்டை, வாஸ்து நகர், சாணார்பதி, நஞ்சகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சாக்கடை அடைப்பினால் நஞ்சகவுண்டம்பாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
கீரிப்பள்ளம் ஓடையில் கலந்த மழை வெள்ள நீர், தடப்பள்ளி வாய்க்காலில் கலந்தது. இதனால் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, பாரியூர், வெள்ளாளபாளையம் மற்றும் நஞ்சகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வயல்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தடப்பள்ளி பிரதான வாய்க்காலுடன் இணைந்த கூகலூர் கிளை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை பொதுப்பணித்துறையினர் அகற்றாத காரணத்தினால், மழை வெள்ள நீரோட்டம் தடை பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago