30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ் மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி, சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.முருகானந்தம், மாவட்ட நிர்வாகிகள் எம்.பிச்சைமுத்து, என்.கண்ணன், வி.வெங்கடேசன், டி.சுப்பிரமணி, பி.வடிவேல், ஆர்ஆர்.செல்வம் உள்ளிட்டோர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனு விவரம்: கடந்த 27 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் குறைந்த தொகுப்பூதியத்தில் 27,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கரோனா நோய்த் தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், உயர்ந்து வரும் விலைவாசியால் குறைந்த தொகுப்பூதியத்தைக் கொண்டு குடும்ப செலவினங்களை மேற்கொள்ள முடியவில்லை. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணி யாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 20 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது. நிகழாண்டு 10 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கும் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளர் களுக்கு வரையறைகளைத் தளர்த்தி 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் வேலை நேரம் காலை 10 முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்தப்பட்ட காலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறைந்திருந்தன. எனவே, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
நாகப்பட்டினத்தில்...
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், மாநில துணைச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago