கரூர் மாவட்டத்தில் ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 78,700 லிட்டர் பால் கொள்முதல்: அமைச்சர்

கரூர் மாவட்ட ஆவின் மூலம் பி.உடையாப்பட்டியில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா, தரகம்பட்டியில் ரூ.5.5 லட்சத்தில் நவீன ஆவின் பாலகம் அமைப்பதற்கான பூமி பூஜை ஆகியன ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசியது:

கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்ந்த 155 முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 78,700 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 5,790 உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு அக்.10-ம் தேதி வரை பால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றார்.

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான், ஆவின் தலைவர் எம்.எஸ்.மணி, ஆவின் பொதுமேலாளர் நடராஜன், மேலாளர் துரையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE