தீபாவளி பண்டிகைக்காக பலகாரங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து, உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியிருப்பதாவது:
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பலகாரங்கள் தயாரிக்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும்போது, அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப் பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ, அசைவ குறியீடு மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
இனிப்பு, காரம் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அவரவர் நிறுவனங்களுக்கு சுகாதாரக் குறியீடு பெறுவது அவசியம். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு, கார வகைகளை அலமாரியில் வைத்து உதிரியாக விற்பனை செய்பவர்கள் அந்தந்த பொருட்களுக்குரிய பயன்படுத்த உகந்த தேதியை பொதுமக்கள் அறியும் வகையில் அலமாரியில் எழுதி வைத்திருக்க வேண்டும்.
பலகாரங்கள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோக்க வேண்டும்.
புகார்களை, திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ, வாய்மொழியாகவோ புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago