சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை வகித்தார்.
நகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலுச்சாமி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் திருமலைச்செல்வி, துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் கூறும்போது, “சங்கரன்கோவில் நகராட்சி மூலம் வியாபாரிகளிடம் வசூல் செய்வதற்கான டெண்டர் காலம் பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால், சில தனி நபர்கள் சொந்தமாக ரசீது அடித்து தினசரி வசூல் செய்துள்ளனர். திருநெல்வேலி போன்ற மாநகராட்சி பகுதிகளில் கூட ஒரு வருடத்துக்கு மிக குறைந்த அளவு தொகையே சாலையோர வியாபாரிகளிடம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சங்கரன்கோவில் நகராட்சியில் மிக அதிக அளவாக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago