சேலம் அரியானூர் மேம்பாலம் பணி 90% நிறைவு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சேலம் அரியானூரில் சேலம்- கோவை இடையிலான 4 வழிச்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் திறக்க வாய்ப்புள்ளது.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேலம்-கோவை இடையிலான 4 வழிச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கொச்சி- கோவை- சேலம்- பெங்களூரு என முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால், நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் ஒன்றாக இது உள்ளது.

இச்சாலையையொட்டி, சேலம் அடுத்த அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய இரு கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்விரு கிராம மக்களும் 4 வழிச்சாலையின் குறுக்கே கடந்து செல்ல பாதுகாப்பான வழி இல்லை. எனவே, சாலையின் குறுக்கே நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், பலர் உயிரிழப்பதும் தொடர் கதையாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில், அரியானூர் மேம்பாலப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “அரியானூர் மேம்பாலம் 37 மீட்டர் அகலம் சுமார் 1 கிமீ நீளமும் கொண்டது. இப்பாலப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பாலத்தில் இறங்கு தளம் அமைக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. எனவே, பணிகள் அனைத்தும் முடிவுற்று, டிசம்பருக்குள் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்