தென்மேற்குப் பருவமழை காரணமாகவும், மின்சாரப் பயன்பாடு குறைந்ததாலும், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின் உற்பத்தி பயன்பாடு அதிகரிக்கும்போது, அனல் மின் நிலையங்கள் யாவும் முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மின் தேவை குறைவாக இருந்ததால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் உள்ள 2 அனல் மின் நிலைய பிரிவுகளில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் தேவை குறைவால் கடந்த 3 மாதங்களாக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனல் மின் நிலைய உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி கரோனா பரவல் அச்சம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 6 மாதங்களாக தொழிற்சாலைகள், திரையரங்குகள், ஐடி நிறுவனங்கள் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சார தேவை கணிசமாக குறைந்தது. மேலும், தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்தது.
மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பியதால், பாசனத்துக்கு தடையின்றி நீர் கிடைத்தது. குறிப்பாக மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால், விவசாயத்துக்கான மின்சார தேவை கணிசமாக குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரைப் பயன்படுத்தி அணையில் உள்ள மின் நிலையம், காவிரியில் உள்ள கதவணைகள் மூலமான மின் உற்பத்தி என தொடர்ந்து, புனல் மின்சாரம் கிடைத்து வந்தது. எனவே, அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உருவானது.
இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 2 அலகுகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. 600 மெகா வாட் கொண்ட 2-வது பிரிவு 3 மாதத்துக்கு முன்னர் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் செப்டம்பரில் ஒரே ஒரு நாள் மட்டுமே இயக்கப்பட்டு, தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்திக்கு பதிலாக, சராசரி 420 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றது.
மின் உற்பத்தி குறைந்ததால், நிலக்கரி தேவை குறைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், மின் உற்பத்தி குறைவால் நாளொன்றுக்கு 8 ஆயிரம் டன் வரை மட்டுமே நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அடுத்த சில மாதங்கள் குளிர் காலம் என்பதால், இனியும் மின் தேவை உயர வாய்ப்பில்லை. பிப்ரவரி மாதத்துக்குப் பின்னர் தான் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago