மணப்பாறையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை அச்சடித்து மொத்த விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் புழக்கம் அதிகளவில் இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி, டி.எஸ்.பி பால்சுதர் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த ஒரு வாரமாக மணப்பாறையில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று மணப்பாறையில் 13 இடங்களில் சோதனையிட்டனர்.
அப்போது லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்று வந்ததாக, மணப்பாறை கோவிந்தசாமி தெரு ரெங்கசாமி மகன் ராமமூர்த்தி(58), வாகைக்குளம் ரோடு வடக்கு லெட்சுமிபுரம் அறிவழகன் மகன் ஜெகநாதன்(27), விடத்திலாம்பட்டி கருப்பையா (எ) கர்ணன்(53), மணப்பாறை அண்ணாவி நகர் ஜெயராஜ் மகன் அர்ஜூன்(34), காட்டுப்பட்டி காமராஜ் நகர் அய்யாவு மகன் பாலா(29) ஆகியோரைப் பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாட்டரி சீட்டு அச்சடிக்க பயன்படுத்திய கணினி, பிரின்டர், லாட்டரி சீட்டுக்கான காகிதங்கள், 10 செல்போன்கள், 2 இரு சக்கர வாகனங்கள், வரவு செலவு விவரங்கள் அடங்கிய நோட்டுகள், பில் புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர இக்கும்பலில் தொடர்புடைய 2 பெண்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படக்கூடிய லாட்டரி சில்லறை விற்பனையாளர்களுக்கு இவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மொத்தமாக அச்சிட்டு வழங்கப்பட்டு வந்துள்ளன. தற்போது நவ.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததன்மூலம் கிடைத்த ரூ.8,120 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்கும்பலுக்கு திருச்சியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரிகள் சிலர் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும் அவர்களின் கணினியை ஆய்வு செய்தபோது, லாட்டரி சீட்டுகளுக்கான வரிசை எண்கள் மற்றும் குலுக்கல் முடிவுகளை அளிக்கக்கூடிய 3 இ-மெயில் முகவரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தக்கூடிய நபர்கள் யார், எந்த ஊரிலிருந்து இக்கும்பல் செயல்படுகிறது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago