திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் மானூர் ஒன்றியம், அழகியபாண்டியபுரம் ஊராட்சி யில் உள்ளது செட்டிகுறிச்சி கிராமம். இங்கு 100 ஏக்கர் பாசனத்துக்கு நீராதாரமான குளம் உள்ளது. இந்த குளத்துக்கு 1 கி.மீ. வடக்கே சுப்பையாபுரம் கிராமம் மற்றும் அக்கிராமத்துக்கு வடக்கே 500 மீ தொலைவில் சாலையின் கீழ்ப்பக்கம் 100 ஏக்கர் தரிசு பகுதிகள் காற்றாலைக்காக விற்பனை செய்யப்பட்டு, சாகுபடி செய்யப்படாமல் இருக்கிறது.
மழைக் காலங்களில் இந்த பகுதியில் பெருகும் வெள்ளநீர் அப்படியே வடிந்து சங்கரன் கோவில்- திருநெல்வேலி நெடுஞ்சாலையின் இரு பக்கமும் இருந்த நீரோடைகள் வழியாக வடக்கிலிருந்து 1.5 கி.மீ. பயணித்து, செட்டிகுறிச்சி குளத்தை வந்தடைந்தது. இதனால் குளமும் விரைவாக நிரம்புவதற்கு வசதியாக இருந்தது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி- சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போது இந்த நீரோடைகள் இருபுறமும் தூர்ந்துபோய்விட்டன. நெடுஞ்சாலைத்துறை பணி களுக்காக கொண்டுவரப்பட்ட மணல் மற்றும் பொருட்கள் நீரோடைகளில் கொட்டப்பட்டதால், நீரோடைகளில் தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் போனது. கரைகளும் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
ஆட்சியருக்கு மனு
இது தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மதிமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜே.சந்திரசேகர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறும்போது, “விருதுநகர் குடிநீர் திட்டத்து க்காக கொண்டுவரப்பட்ட ராட்சத குழாய்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. பணிகள் முடிவடைந்த பின்னர் உபரி குழாய்களை அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே நீரோடையில் குறுக்கே போட்டுள்ளனர். நீரோடைகள் தூர்ந்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக மழைக்காலங்களில் குளத்துக்கு தண்ணீர் வராமல், சுப்பையாபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு வடக்கு பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளிலும் அரிப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளநீர் வீடுகளை சுற்றி தேங்குவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, நீரோடைகளை சீரமைக்கவும், உபரி குடிநீர் ராட்சத குழாய்களை அப்புறப்படுத்தவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago