அணைப் பகுதியில் குளிக்க தடையை தீவிரமாக செயல்படுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

அணைப் பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகள், அணை களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வது வழக்கம். அணைகளில் குளிக்க ஏற்கெனவே தடை உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருவிப் பகுதியில் தினமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அருவி களில் குளிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அணைப் பகுதிக்குச் செல்ல பொதுப்பணித் துறையால் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் அணைப் பகுதியில் குளித்தவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்கெனவே பல முறை நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் குண்டாறு அணையில் குளித்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படும்போது மட்டும் சில நாட்கள் அணைப் பகுதிகள் தீவிரமாக கண் காணிக்கப்படுகின்றன. அதன் பின்னர் வழக்கம்போல் கண்டு கொள்ளப்படுவதில்லை.

உயிரைப் பற்றிய அச்சம் சிறிதும் இன்றி குண்டாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வழியாக நடந்து சென்று, அதை வீடியோ படம் எடுத்து முகநூலில் சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும், ராமநதி, கடனாநதி, அடவிநயினார் அணையிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சிலர் சென்று வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும், மக்கள் நலனுக்காகத்தான் தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்பதை மக்களும் அறிந்துகொண்டு ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்