கோவை மாவட்டத்தில் நேற்று 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்து வருவதால் கல்வி நிலையங்களில் இயங்கும் சிகிச்சை மையங்களை மூட மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியதாவது:
கோவையில் அறிகுறி இன்றி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கொடிசியா, அன்னூர், துடியலூர், கருமத்தம்பட்டி, சித்தாபுதூர், காளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களில் பெரும் சதவீதத்தினர் மாநகராட்சிப் பகுதியை சேர்ந்தவர்கள். கொடிசியாவில் 800 படுக்கைகள் வரை காலியாக உள்ளன. அதேபோல, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் அதிகளவு காலி படுக்கைகள் உள்ளன. கோவையில் கரோனா தொற்று விகிதம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி, அரசு தொழில்நுட்ப கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் செயல்பட்டுவரும் கரோனா சிகிச்சை மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட காளப்பட்டி கரோனா சிகிச்சை மையமும் மூடப்பட உள்ளது. இனி அனைவரும் கொடிசியா மையத்துக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago