இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் தலைவர் சுரேந்தர் விட்டல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிக்கும், உள்ளூர் திட்டக் குழுமங்களுக்கும் கட்டிட வரைபட அனுமதிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டுமென்று கட்டுமானத் துறையின் சார்பாக, அண்மையில் தமிழக அரசிடம் ‘கிரெடாய்’ மனுவை அளித்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்பு தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வீட்டு உபயோகத்துக்கான கட்டிடங்களுக்கு, 7 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே அனுமதி அளிக்க அதிகாரம் இருந்தது. தற்போது 10 ஆயிரம் சதுரஅடி வரை அனுமதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சமீபத்தில் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளுக்கு பொது மக்களிடையே வரவேற்பு அதிகரித்துவருகிறது.
எனவே, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப கட்டிடத் துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக அடுக்குமாடி வீடுகளுக்கு உள்ளூர் திட்டக் குழுமம் 50 ஆயிரம் சதுர அடி வரை அனுமதி அளிக்க ஆவன செய்ய வேண்டும். இதனால் பொதுமக்களும், கட்டிடத் துறையினரும் பல முறை சென்னை சென்று திரும்பும் சிரமத்தை தவிர்க்க உதவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago