சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக கடந்த மார்ச் 27 முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு சென்னையைச் சேர்ந்த 96 வயதான திரிபுரசுந்தரி என்பவர் தீவிர கரோனா தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்தனர். 10 நாள் சிகிச்சைக்குப்பின் பூரணமாக குணமடைந்த மூதாட்டி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனை டீன் ஜெயந்தி, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மருத்துவர்கள் நளினி, சுஜாதா, ரேவதி, சித்ரா, நிஷா, புருசோத்தமன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் கேட்டபோது, “இந்த மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 23,037 பேரில் 21,329 பேர் (92.6 சதவீதம்) குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 90 வயதுக்கு மேற்பட்ட 31 பேரில் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதயம், நுரையீரல், சிறுசீரக பாதிப்பு என இணை நோயுடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம்’ மூலம் சுமார் 300 பேர் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடத்துக்கான விருதை பெற்றுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago