சேலம் பெரியார் பல்கலை.யில் ரூ.9.66 கோடி மதிப்பில் செயற்கை ரப்பர் ஓடுதளம் துணைவேந்தர் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.9.66 கோடி மதிப்பில் செயற்கை ரப்பர் ஓடுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரியார் பல்கலைக்கழகத்தின் துறைகள், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைவுபெற்றக் கல்லூரிகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கானப் பிரிவில் கல்வி பயின்று வருகின்றனர்.

விளையாட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகத்தில் 400 மீட்டர் சுற்றளவு கொண்ட 8 தடங்கள் கொண்ட செயற்கை ரப்பர் ஓடுதளம் அமைக்க பல்கலைக்கழக உடற்கல்வித் துறையின் சார்பில் கருத்துரு மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் கேலா இந்தியா திட்டத்தின் கீழ் சமர்பிக்கப்பட்டது.

இதை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ரூ.2.66 கோடி பல்கலைக்கழக நிதியிலிருந்து ஒதுக்க நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு 400 மீட்டர் சுற்றளவில் 8 தடங்களைக் கொண்ட செயற்கை ரப்பர் ஓடுதளம் அமைக்கப்படும். இது தமிழகத்தில் விளையாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அடுத்து இங்கு அமையும் இரண்டாவது பெரிய ஓடுதளமாகும்.

செயற்கை ரப்பர் ஓடுதளம் என்பது பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான தகுதி பெறும். இதில், மழைக்காலங்களில் கூட தடையின்றி போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரர்களைப் போட்டிகளின்போது காயமின்றி பாதுகாக்கவும், இப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் திறம்பட பயிற்சிகளை மேற்கொள்ளவும், பன்னாட்டு அளவில் தடகள வீரர்களை உருவாக்கவும் இப்புதிய செயற்கை ரப்பர் ஓடுதளம் உதவியாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்