நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்ய வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்க வேண்டும், அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும், என திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடம் கட்டும் பணி சுமார் ரூ.350 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் சுமார் 45 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. இச்சூழலில் கடந்த 30-ம் தேதி மருத்துவமனைக் கட்டிடத்தின் முன்பகுதி முழுமையாக இடிந்து விழுந்துவிட்டது. இதனால் கட்டுமானத்தின் தரம் குறித்து பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, இதுவரை மேற்கொண்டுள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடி வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழுவின் ஆய்வறிக்கை கிடைக்கப் பெறும் வரை அவசர கதியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்கவேண்டும்.

மேலும், பொதுமக்கள், மருத்து வக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரையும் எதிர்காலத்தில் பாதுகாக்கும் வகையில் 10 நாட்களுக்குள் வல்லுநர் குழு அமைத்து ஆய்வுப்பணி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சங்கம் போராட்டம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முகப்பு கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தேர்தலை மனதில் கொண்டு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை அவசர கோலத்தில் நடத்துகின்றனர். கட்டிடத்தின் கட்டுமான பொருட்கள் தரமின்றி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கட்டிட பணியினை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும், கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர்களை கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் எம்.தேன்மொழி, மாவட்ட துணைத்தலைவர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்