திலேப்பியா மீன்களை வளர்க்க மானியம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: விவசாயிகள் பண்ணைக் குட்டைகள் அமைத்து, வேகமாக வளரக்கூடிய மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 40 சதவீதம் மானியத்தில் 1000 ச.மீ அளவில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்வளர்ப்பினை விவசாயிகள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீன்குஞ்சுகள், மீன்தீவனங்கள் மற்றும் பறவைகளிடமிருந்து காக்க வலைகள் அமைத்தல் ஆகியவற்றிற்கு 40 சதவீதம் பின்னிலை மானியமாக (அதிக பட்சமாக ரூ.39 ஆயிரத்து 600) வழங்கப்படும்.

மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணைக்குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக்கூடியது. விருப்பமுள்ள விவசாயிகள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை (0424 2221912) தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்