ராஜவாய்க்கால் நவீனப்படுத்தும் பணி முடிக்கப்பட்டு நவம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த நிலையில், தண்ணீர் திறக்கப்படாததால் பாசன விவசாயிகளை ஏமாற்றமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றிலிருந்து பாசன வசதிக்காக ராஜவாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
இந்த வாய்க்கால் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் ரூ.184 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக கடந்த மார்ச் மாதம் ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நான்கு மாதத்திற்குள் பணி நிறைவு செய்யப்பட்டு ஜூன் மாதம் வாய்க்காலில் தண்ணீ்ர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், கரோனா ஊரடங்கால் வாய்க்கால் நவீனப்படுத்தும் பணி நிறைவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் வாய்க்கால் பாசன விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மேலும், வாய்க்காலில் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்ததுடன், பணியை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ராஜவாயக்கால் நவீனப் படுத்தும் பணியை கடந்த மாதம் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், வாய்க்கால் சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்பட்டு நவம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சியர் கூறியபடி பணியும் முடியவில்லை, தண்ணீரும் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறுகையில், வாய்க்கால் நவீனப்படுத்தும் பணி சிறிது தொலைவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்பணி விரைந்து முடிக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago